தற்போதைய பாராளுமன்றம் உரிய காலத்திற்கு முன்பாக கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
பாராளுமன்றம் இரண்டரை வருடங்களில் கலைக்கப்படுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு தமது கட்சியிலுள்ள பெரும்பாலானோர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அதனால், 22 திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
எனினும், 22வது திருத்தமானது காலத்தின் தேவை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவரது ஆதரவும் தேவை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.