இந்தோனேசியாவின் வடக்கு பப்புவாவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 20 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு பப்புவாவில் நேற்று முன்தினம் கடும் மழை பெய்தது. இதன் விளைவாக தாழ்நிலங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த சட்ட விரோத தங்கச் சுரங்கத்திற்குள்ளும் வௌ்ள நீர் புகுந்தது. அச்சயம் தொழிலாளர்கள் பலர் தங்கம் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வேளையில் குறித்த சுரங்கம் பாரிய சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்ததது.
இதனையறிந்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும் சுரங்க இடிபாடுகளில் சிக்குண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 20 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கும் இந்தோனேசியா கடந்தாண்டில் மாத்திரம் சுமார் 100 தொன் தங்கத்தை ஏற்றுமதி செய்துள்ளது.
வடக்கு சுலேவேசியில் உள்ள டோகா திண்டுங் தங்க சுரங்கமே இந்தோனேசியாவில் காணப்படும் மிகப்பெரிய தங்க சுரங்கங்களில் ஒன்றாகும்.
கிழக்கு ஜாவாவில் உள்ள சும்பெராகுங் தங்க சுரங்கம், தும்பாங் தங்க சுரங்கம் என அரசு சார்பிலும் தனியார் நிறுவனங்களும் தங்க சுரங்கங்களை தோண்டி தங்கத்தை வெட்டி எடுத்து வருவது தெரிந்ததே.